Thursday, April 5, 2012

அவளும் அவளும்



அழுகிறேன்.
என் ஒருத்தனுக்கு மட்டுமே
கேட்கும் வண்ணம்.
எதற்காக என்று தெரியவில்லை.

உள்ளே நீ.
ஒரு உடலில்
மூன்று உயிர் சுமக்கிறாய்.
என் உயிரையும் சேர்த்து.

ரணவேதனை உணர்கிறேன்.
உயிர் வலிக்கிறது.
உன் அழுகை கேட்கும் நொடியெல்லாம்.

ஓடி வந்து கை பிடித்து
ஆறுதல் கூற ஆசை. இருந்தும்
தீவிர சிகிச்சைப் பிரிவு
என எழுதப்பட்ட கண்ணாடி கதவு
என்னை கையாலாகாத
காதலனாய் பணித்துவிட்டது.

உயிர் நொடி அது.
நானும் நீயும் செத்துப் பிழைத்த நொடி.
உன் உயிர் உச்சத்தில் கதற
ஒரு கனம்
என் உயிர் நின்று துடித்தது.

அமைதி.
அமைதிக்குப் பின்
உள்ளிருந்து எட்டிப்பார்த்த
இரு அழுகை.

உன் குரலும்
கொஞ்சம் ஸ்ருதி குறைந்த
துணைக் குரலுமாய்
இன்னொன்றும்.

சற்று நேரத்தில் “உங்களுக்கு பெண் குழந்தை”
என இரத்தம் பூசி மொழுகிய
பிண்டமாய் கொடுக்கப்பட்டால் அவள்.

என் உள்ளங்கையில் அடங்கிப்போனால் நம் தேவதை.
அள்ளி அணைத்தேன்.அழுதேன்.
முத்தமிட்டு முகர்ந்தேன்.
முழுவதுமாய் அவளை.
இரத்தத்தின் கவுச்சி வாடையுடன்,
மெலிதாய் உன் வாசமும் அவள் மேல்.

நீ இவளை தூக்கிக்கொள்.
நான் உன்னை தூக்கிக்கொள்கிறேன்.
வா. நம் வீட்டுக்குப் போகலாம்.
இப்போது உன்னோடு சேர்த்து எனக்கு
இரண்டு குழந்தைகள்.

5 comments:

  1. அழகிய புது வசந்தம் வாசல் வந்ததா ? நண்பரே ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தோழரே., எனக்கு திருமணம் ஆகவில்லை.என் எழுத்துக்கள் அனைத்தும் என் கற்பனையே.

      Delete
  2. தோழரே., எனக்கு திருமணம் ஆகவில்லை.என் எழுத்துக்கள் அனைத்தும் என் கற்பனையே.

    ReplyDelete