இது எனக்கும் அவனுக்குமான உரையாடல்;
யார் என்று பிறகு சொல்கிறேன்
விடயம் என்னவென்று இங்ஙனம் கேளுங்கள்.
கையுடைந்து, காலுடைந்து
ஒரு பக்கம் முகம் கிழிந்து
ரத்தம் சொட்ட சொட்ட இறந்து கொண்டிருந்த
அவளை தூக்கிச்சென்று கொண்டிருந்தான்.
மனதில் இருந்த தெம்பு உடலில் இல்லை போலும்
களைப்பாற நிழல் தேடி ஒதுங்கினான்.
யார் நீ? எங்கு செல்கிறாய் ? என்றேன்.
பதிலேதும் உரைத்தது போல தோன்றவில்லை எனக்கு.
களைப்பாக இருக்கிறாயே ஏதாவது வேண்டுமா? என்றேன்,
மௌனம வேண்டாம் என்றது.
சற்று நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு
உடலில் இருந்த சக்தி எல்லாம் ஒன்று திரட்டி பேசத் துவங்கினான்.
எந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியமோ
இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு பிறப்பெங்களுக்கு.
பெத்தவங்க இருக்காங்க.
ஆனா ஊரார் தான் ஊட்டி வளத்தாங்க.
கடவுள் எங்களுக்குன்னு ஒன்னும் கொடுக்கலனாலும்
இருக்கறத வச்சி வளமா வாழ்ந்தோம்.
ஒத்துமையும் சிக்கனமும் எங்க கிட்ட கைகட்டி பிச்ச வாங்கணும்.
இவள நா உசுருக்குசுரா நேசிக்கறேன்.
பாவிமாக சோறு எடுக்கப் போகையில வண்டில அடிபட்டுட்டா.
நாதியத்துக் கிடந்தா.
இனி ஏதும் ஆகாது.பொழச்சுக்குவா.
அதான் நா வந்துட்டேன்லனு சொல்லிட்டு
வாஞ்சையோடு தடவிக்கொடுத்தான்.
எத்துனை அன்னியோன்யம் அவர்களுக்குள்.
வலியால் துடித்துக்கொண்டிருந்த அவள்
எதோ முணுமுணுக்க “நாங்க கிளம்பறோம்”னு சொல்லிட்டு
அவள மொத்தமா தூக்கிக்கிட்டு வீடு நோக்கி நடந்தான்
எங்க வீட்டு கட்டெறும்பு தேவன்.
காதல் பொதுவுடைமையானது.
அது மனிதர்களுக்காக படைக்கப்பட்டது அல்ல.
காதலுக்காக படைக்கப்பட்டதுள் மனிதனும் ஒருவன்.